நாகை பகுதிகளில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி


நாகை பகுதிகளில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 5 Oct 2019 11:00 PM GMT (Updated: 5 Oct 2019 7:07 PM GMT)

நாகை பகுதியில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் திட்டச்சேரி, திருமருகல், வேளாங்கண்ணி, நாகை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாகை பகுதிகளில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

கொசுவலை

நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை. கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இன்று வரை நாகை அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் வந்த நோயாளிகள் 5 பேர் ஆவர். இதில் சிகிச்சை பெற்று 4 பேர் வீட்டுக்கு சென்று விட்டனர். ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார்.

நாகை தலைமை ஆஸ்பத்திரியில் 90 பேர் காய்ச்சல் காரணமாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு கொசுவலையுடன் கூடிய படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகடைகளில் சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. அதே போல் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமே டெங்குகாய்ச்சல் தொடர்பான பரிசோதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story