கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகம் நோக்கி பேரணி: நகராட்சி-மாநகராட்சி அலுவலர்கள் சங்க மாநில தலைவர் தகவல்


கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகம் நோக்கி பேரணி: நகராட்சி-மாநகராட்சி அலுவலர்கள் சங்க மாநில தலைவர் தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2019 3:15 AM IST (Updated: 6 Oct 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

‘கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகம் நோக்கி பேரணி நடத்தப்படும்’ என்று தமிழ்நாடு நகராட்சி-மாநகராட்சி அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சையது உசேன் தெரிவித்தார்.

திண்டுக்கல், 

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் சையது உசேன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தாமோதரன், மாநில துணை தலைவர் முகமது ரசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், நகராட்சி, மாநகராட்சி அலுவலர்களின் பிரச்சினைகளை அரசுக்கு வலியுறுத்தும் வகையிலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில், சங்க மாநில தலைவர் சையது உசேன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி அரசு ஊழியர்கள் அனைவரையும் திரட்டி சென்னை தலைமை செயலகம் நோக்கி பேரணி நடத்தப்படும். அந்த பேரணியின் முடிவில் தலைமை செயலக அதிகாரிகளை சந்தித்து, நகராட்சிகளில் தொடங்கப்பட உள்ள கணக்கு பிரிவை ரத்து செய்ய வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளை தரம் உயர்த்தும் போது, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story