ஸ்ரீமுஷ்ணம் அருகே, டாஸ்மாக் கடையில் பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஸ்ரீமுஷ்ணம் அருகே டாஸ்மாக் கடையில் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தில், ஸ்ரீநெடுஞ்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக வேல்முருகன் என்பவரும், விற்பனையாளராக மணிகண்டன், விஜயரங்கன், மதிவாணன் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் அந்த பணத்தை எடுத்து கொண்டு விற்பனையாளர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதுபற்றி டாஸ்மாக் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் கடைக்கு விரைந்து வந்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் டாஸ்மாக் கடையை ஊழியர்கள் பூட்டி சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கடை ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கல்லா பெட்டியில் இருந்த ரூ.1,050, 48 மதுபாட்டில்கள் கொண்ட ஒரு அட்டை பெட்டி ஆகியவற்றை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வந்து கடையில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story