தர்மபுரி மாவட்டத்தில், குடிமராமத்து பணிகளை தரமாக முடிக்க வேண்டும் - தமிழக அரசின் முதன்மை செயலர் அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை தரமான முறையில் விரைவாக முடிக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசின் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலர் சந்தோஷ்பாபு அறிவுறுத்தினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக அரசின் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலரும், தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தோஷ்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கலெக்டர் மலர்விழி உடனிருந்தார். அரசு முதன்மை செயலர் சந்தோஷ்பாபு அப்புசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் தூய்மை தூதுவர் அடையாள அட்டைகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பாளையம்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சை பணி, தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் இ-சேவை மைய செயல்பாடுகள், குமாரசாமிப்பேட்டை பகுதியில் தூய்மைபணி ஆகியவற்றை பார்வையிட்டார். அன்னசாகரம் ஏரியை பார்வையிட்ட அவர் அந்த ஏரியை சுற்றுலா தலமாக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பென்னாகரம் தாலுகா சருக்கல்பாறை மலைப்பகுதியில் குகைகளில் வசித்து வந்த மலைவாழ்மக்களுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 24 பசுமை வீடுகளை பார்வையிட்டார். அவற்றில் சூரிய சக்தி மின்சார வசதி ஏற்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அரசு முதன்மை செயலர் சந்தோஷ்பாபு பேசியதாவது:- பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் அரசு மருத்துவமனைகள் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போலி டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும். முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், அரூர் உதவி கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் நாசர் செரீப், மருத்துவபணிகள் இணை இயக்குனர் தேவபார்த்தசாரதி, ஒகேனக்கல் குடிநீர் திட்ட நிர்வாக செயற்பொறியாளர் சங்கரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வரதராஜபெருமாள், மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story