நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை 5-வது முறையாக பில்லூர் அணை நிரம்பியது - 4 மதகுகளில் தண்ணீர் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நடப்பு ஆண்டில் 5-வது முறையாக பில்லூர் அணை நிரம்பியது. 4 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பில்லூர் அணை உள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடியாகும். நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 88 அடியாக இருந்தது. மின் உற்பத்திக்காக ஒரு எந்திரத்தை இயக்கியதில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் அணையின் நீர் மட்ட உயரம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 97.5 அடியை எட்டியது. ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 9.5 அடி உயர்ந்தது. இதன்மூலம் ஒரே ஆண்டில் பில்லூர் அணை 5-வது முறையாக நிரம்பியது.
அணையின் பாதுகாப்புக்கருதி காலை 6 மணிக்கு அணையின் 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி என மொத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட் டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்பாலம் அருகே கரையோரப்பகுதியில் உள்ள பவானி அம்மன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி அறிவுறுத்தலின் பேரில் பவானி ஆற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரப்பகுதியில் உள்ள தேக்கம்பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மேடான பகுதிக்கு செல்லவும். மேலும் பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தாசில்தார் சாந்தாமணி பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட்டார். தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை மேடான பகுதிக்கு செல்ல கேட்டுக் கொண்டார். அவருடன் வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் சென்றனர்.
Related Tags :
Next Story