காமராஜ் நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது


காமராஜ் நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 22 Oct 2019 11:15 PM GMT (Updated: 22 Oct 2019 8:13 PM GMT)

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. இதையொட்டி வாக்குகள் எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. தொகுதி முழுவதும் 21 இடங்களில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளர்களுக்காக பந்தல், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்காக சாய்வுதளம் அமைக்கப்பட்டிருந்தது. தேர்தல் பணியில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.

காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். அப்போது மழை பெய்தபடி இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினார்கள். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. காமராஜ் நகர் தொகுதியில் மொத்தம் 35 ஆயிரத்து 9 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 24 ஆயிரத்து 310 பேர் (ஆண்கள்- 11,695, பெண்கள்- 12,614, மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர்) வாக்குகளை பதிவு செய்தனர். இது 69.44 சதவீதம் ஆகும்.

வாக்குப்பதிவு முடிந்ததும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்கிற்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

அங்கு உள்ளூர் போலீசார், துணை ராணுவப்படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த அறையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு, பகல் என 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு நாளை (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருண் நேற்று ஆய்வு நடத்தினார்.

இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மையத்திற்கு யார், யார் வருகிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்காக பதிவு புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு 11 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 32 வாக்குச்சாவடிக்கான வாக்குகளும் 3 சுற்றுகளாக எண்ணப்படும். வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன்பின் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

அதைத்தொடர்ந்து வி.வி.பாட் எந்திரங்களில் உள்ள வாக்கு சீட்டுகள் எண்ணப்பட்டு சரிபார்க்கப்படும். பகல் 12 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியிடப்படும்.

இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘மழைக்காலத்தை எதிர்கொள்ள கடந்த 2 வாரத்துக்கு முன்பே பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்ட மின்துறை மற்றும் வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயரமான கட்டிடங்களில் உள்ள விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்தவும் தனியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்யும் பணியும் நடந்து வருகிறது’ என்றார்.

Next Story