வழக்கு விசாரணைக்காக ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்டு ஆஜர்; மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு


வழக்கு விசாரணைக்காக ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்டு ஆஜர்; மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Oct 2019 4:30 AM IST (Updated: 26 Oct 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக மாவோயிஸ்டு ஒருவரை ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச்சென்றனர். அப்போது அந்த மாவோயிஸ்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி,

கேரளா மாநிலம்் அகழி என்ற இடத்தில் மாவோயிஸ்டு இயக்கத்திற்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் பழங்குடியின மக்களிடம் பேசியதாக கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியை சேர்ந்த டேனிஸ் என்ற கிருஷ்ணா (வயது 31) என்பவரை கேரள போலீசார் கடந்த ஆண்டு கைது செய்து திருச்சூர் சிறையில் அடைத்தார்கள். கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கொம்பை கிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் புகுந்து அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து கொலக்கொம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கில் டேனிசுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கொலக்கொம்பை போலீசார் நீலகிரி மாவட்ட கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதனைத்தொடர்ந்து கோர்ட்டில் வாரண்டு பெறப்பட்டு கேரள போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 26-ந் தேதி கேரள போலீசார் டேனிசை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதனால் திருச்சூர் சிறையில் இருந்து மாவோயிஸ்டு டேனிசை ஊட்டி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கேரள போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அப்போது அவர், மாவோயிஸ்ட்டுகள் சிந்தாபாத், செங்கொடி ஏந்துவோம், மோடி அரசை எதிர்ப்போம், அம்பானி, அதானியை எதிர்ப்போம் என்று கோஷமிட்டதால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை, போலீசார் கோர்ட்டுக்குள் அழைத்துச்சென்றனர். அப்போது நீதிபதி முரளிதரனிடம், வக்கீலிடம் பேச அனுமதிக்கும்படி டேனிஸ் கேட்டார். அதற்கு நீதிபதி என்ன விஷயம் என்று கேட்டதை அடுத்து, வழக்கு சம்பந்தமாக என்று மாவோயிஸ்டு கூறினார். இதுகுறித்து மனுத்தாக்கல் செய்யும் படி நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற நவம்பர் மாதம் 22-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவோயிஸ்டு டேனிஸ், திருச்சூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Next Story