தூத்துக்குடியில் தண்ணீரில் மூழ்கி 2½ வயது குழந்தை சாவு

தூத்துக்குடியில் தண்ணீரில் மூழ்கி 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி திரேஸ்புரம் குழந்தை திரேசம்மாள்புரம் கோவில் தெருவை சேர்ந்தவர் லிங்கேசுவரன் (வயது 27) மீனவர். இவருக்கும் நிஷா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய மகள் ரேவதி சஞ்சனா (2½).
இந்த நிலையில் நேற்று மாலையில் கணவன்-மனைவி திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் தொடர்பான செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது குழந்தை ரேவதி சஞ்சனா வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தது. பின்னர் குழந்தை மாயமானது.
சிறிது நேரத்தில் லிங்கேசுவரன், நிஷா ஆகியோர் தங்களது குழந்தையை தேடினர். அப்போது வீட்டின் குளியல் அறையில் இருந்த டிரம்மில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தை கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ரேவதி சஞ்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடியில் தண்ணீரில் மூழ்கி 2½ வயது குழந்தை இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story