பெரம்பலூர் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


பெரம்பலூர் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 31 Oct 2019 10:45 PM GMT (Updated: 31 Oct 2019 3:34 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான ஒற்றையர், இரட்டையர் கேரம் விளையாட்டு போட்டிகள், எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இளநிலை, முதுநிலை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான ஒற்றையர் இளநிலை பிரிவு போட்டியில் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளி மாணவி சங்கரி முதல் இடமும், பாடாலூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவி மதுமிதா 2-வது இடமும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவிகள் அணி முதல் இடமும், புனித ஜோசப்பள்ளி மாணவிகள் அணி 2-வது இடமும் பெற்றனர். மாணவர்களுக்கான ஒற்றையர் போட்டியில் மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவர் சரவணன் முதல் இடத்தையும், பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் தவனேஷ் 2-வது இடத்தையும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் பாடாலூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தையும், மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 2-வது இடத்தையும் பெற்றனர்.

பரிசளிப்பு

6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் முதுநிலை பிரிவு மாணவர்களுக்கான போட்டியில் தந்தை ரோவர் பள்ளி மாணவர் தீனதயாளன் முதல் இடமும், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தாத்தையா 2-வது இடமும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதல் இடமும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவர்கள் 2-வது இடமும் பெற்றனர். மாணவிகளுக்கான ஒற்றையர் போட்டியில் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவி சவுமியா முதல் இடமும், தனலட்சுமிசீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவி புஷ்பாதேவி 2-வது இடத்தையும் பெற்றனர். இரட்டையர் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவிகள் முதல் இடத்தையும், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2-வது இடத்தையும் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். விழாவில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டேக்வாண்டோ பயிற்றுனர் தர்மராஜன் வரவேற்றார். முடிவில் கைப்பந்து பயிற்றுனர் வாசுதேவன் நன்றி கூறினார்.

Next Story