உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 6:10 PM GMT)

உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கி உள்ளார். பருவமழையை பொதுமக்கள் வரவேற்கின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு போதிய விடுதிகள் அமைக்க வேண்டும். கோவில் வெளிப்பிரகாரத்தில் விரைவில் நிரந்தர கல் மண்டபம் அமைக்க வேண்டும்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடமும், என்னிடமும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளரும் நேரில் வந்து எங்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையிலான பலமான கூட்டணி தொடரும். இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று, உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்ததை அரசியலாக்க வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு கொள்கிறேன். அங்கு நடைபெற்ற மீட்பு பணியை சிறுவனின் பெற்றோரும், ஊர் மக்களும் பாராட்டினர். ஆனால் சிறுவனின் மரணத்திலும் தி.மு.க. அரசியல் செய்கிறது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஆழ்துளை கிணறுகளில் தவறி விழுந்த 12 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அப்போது இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க தி.மு.க. என்ன செய்தது?.

தமிழகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்களை தெரிவிக்கும்போது, சிந்தித்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story