சிவமொக்காவில் 100 ஏக்கரில் குரங்குகள் பூங்கா: வனத்துறை அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவு


சிவமொக்காவில் 100 ஏக்கரில் குரங்குகள் பூங்கா: வனத்துறை அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவு
x
தினத்தந்தி 5 Nov 2019 11:30 PM GMT (Updated: 5 Nov 2019 8:36 PM GMT)

சிவமொக்காவில் 100 ஏக்கரில் குரங்குகள் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

சிவமொக்காவில் குரங்கு பூங்கா அமைப்பது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை மந்திரி சி.சி.பட்டீல், சிவமொக்கா தொகுதி பா.ஜனதா எம்.பி. ராகவேந்திரா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

குரங்குகள், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வர வனத்துறை அதிகாரிகளே காரணம். வனப்பகுதிகளில் தேவையான பழ மரங்களை வளர்த்திருந்தால், குரங்குகளின் தொல்லை ஏற்பட்டிருக்காது. வன அதிகாரிகள் காடுகளில் பழ மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி பலமுறை கூறியும், அதிகாரிகள் கேட்கவில்லை.

இனி வரும் காலங்களில் காடுகளில் பழ வகை மரங்களை அதிக எண்ணிக்கையில் நட்டு வளர்க்க வேண்டும். குரங்குகள் பூங்கா அமைப்பது குறித்து அறிக்கை தயாரித்து அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

அப்போது வனத்துறை அதிகாரிகள் பேசும்போது, “இமாசல பிரதேசத்தில் குரங்குகள் பூங்கா உள்ளது. அதுகுறித்து நாங்கள் நேரில் சென்று ஆய்வு செய்கிறோம்“ என்றனர். இதை கேட்டு கடும் கோபத்தை வெளிப்படுத்திய எடியூரப்பா, “நீங்கள் ஆய்வு செய்வதிலேயே காலத்தை விரயமாக்குவீர்கள். பிற மாநிலத்தவர், இங்கு வந்து ஆய்வு செய்யும் வகையில் நீங்கள் ஏதேனும் செய்துள்ளர்களா?. 100 ஏக்கர் நிலப்பகுதியை அடையாளம் கண்டு உடனே குரங்குகள் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டம் வெற்றி பெற்றால், பிற பகுதியிலும் இத்தகைய பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் ராகவேந்திரா எம்.பி. பேசியதாவது:-

சிவமொக்கா மாவட்டத்தில் குரங்குகளால் விவசாய பயிர்கள் அதிகளவில் நாசம் அடைகின்றன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் குரங்குகள் வீட்டின் கூரைகளையும் சேதப்படுத்துகின்றன. வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் இருப்பவர்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறு கின்றன.

குரங்குகள் அதிக எண்ணிக்கையில் சுற்றுவதால், விவசாயிகள் தங்களின் நிலத்திற்கு வரவே பயப்படுகிறார்கள். குரங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குரங்குகள் பூங்கா ஒன்றை விரைவாக தொடங்க வேண்டும்.

ஷராவதி அணையில் நீர் தேங்கும் பகுதியை ஒட்டியபடி இந்த பூங்காவை அமைக்க வேண்டும். அவைகளுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்க வேண்டும். பழங்கள் கொடுக்கும் மரங்களை அந்த பூங்காவில் வளர்க்க வேண்டும்.

இவ்வாறு ராகவேந்திரா பேசினார்.

Next Story