பள்ளிப்பட்டு அருகே, காட்டுப்பன்றிகளுக்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆந்திர வாலிபர் பலி

பள்ளிப்பட்டு அருகே செல்போன் பேசிச்சென்ற போது காட்டுப்பன்றிகளுக்காக வயலில் அமைத்த மின்சார வேலியில் சிக்கி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக செத்தார்.
பள்ளிப்பட்டு,
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே செர்லோபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணிய ராஜு. இவரது மகன் மனோஜ் (வயது 25). எலக்ட்ரீஷியன். இவர் தனது நண்பர்களான சித்தூர் கிரீம்பேட்டையை சேர்ந்த ஜோதிஷ்வர் (26), ஷியாம் (23), தானப்பண்டா பகுதியை சேர்ந்த நவீன் (24) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை பள்ளிப்பட்டு அருகே உள்ள ஈடிகப்பேட்டை கிராமத்தில் உள்ள நண்பரை பார்க்க வந்தார். அதன் பிறகு அங்குள்ள மாந்தோப்பு ஒன்றில் இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது மனோஜின் செல்போனுக்கு அழைப்பு வந்தது.
இதையடுத்து, மனோஜ் செல்போனில் பேசியபடி இருட்டான பகுதியில் நடந்து சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் நண்பர்கள் அவரை தேடிச்சென்றபோது, சற்று தொலைவில் மனோஜ் கீழே விழுந்து கிடந்தார்.
அவரது வாயிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்ததும், உடனே ஓடிச்சென்ற நண்பர்கள் அவரை தூக்க முயன்றனர். அப்போது அவர்களை மின்சாரம் தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பார்த்தபோது, அங்கிருந்த வயலுக்கு வெளியே காட்டுப்பன்றிகள் நுழைவதை தடுக்கும் விதமாக மின்சார வேலி போடப்பட்டிருந்தது கண்ணில் பட்டது. உடனே பதறிப்போன நண்பர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் மனோஜை பரிசோதித்தபோது அவர் காட்டுப்பன்றிக்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்து போனது தெரிய வந்தது. இது குறித்து பள்ளிப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு இறந்து கிடந்த மனோஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக விவசாயி வெங்கடமுனி என்பவரை கைது செய்தனர். இறந்து போன மனோஜூக்கு தேஜஸ்ரீ (22) என்ற மனைவியும், தீட்சிதா (3) என்ற மகளும், தீட்சா என்ற (1) மகனும் உள்ளனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயராமன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story