தூத்துக்குடியில் பயங்கரம்: இளம்பெண்ணை கொன்று உடல் எரிப்பு - ஆட்டோ டிரைவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்


தூத்துக்குடியில் பயங்கரம்: இளம்பெண்ணை கொன்று உடல் எரிப்பு - ஆட்டோ டிரைவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 Nov 2019 10:30 PM GMT (Updated: 11 Nov 2019 10:14 PM GMT)

தூத்துக்குடியில் இளம்பெண்ணை கொன்று உடலை எரித்தது தொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

தூத்துக்குடி,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 32). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவருடன் விவாகரத்து ஆனதால் கவிதா தூத்துக்குடிக்கு வந்தார். அவர் முத்தையாபுரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து இருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த எட்வின் (30) என்பவருடன் கவிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டது.

அதன்பின்னர் அவர்கள் 2 பேரும் தூத்துக்குடி குமரன் நகரில் ஒரு வீட்டில் வசித்தனர். எட்வின் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தில் அவருக்கு இரவு நேர பணி வழங்கப்பட்டு இருந்தது.

கடந்த 8-ந்தேதி தூத்துக்குடி விவேகானந்தர் நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அவர்கள் குடியேறினர். அப்போது பழைய வீட்டில் இருந்த பொருட்களை தூத்துக்குடி ஜோதிபாசு நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமி (27) தனது ஆட்டோவில் ஏற்றி புதிய வீட்டில் இறக்கினார். இரவு எட்வின் வேலைக்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் காலையில் கவிதாவின் வீடு உட்புறமாக பூட்டி இருந்தது. அங்கிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கவிதா உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், கடைசியாக ஆட்டோ டிரைவர் கருப்பசாமி, கவிதாவின் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் கருப்பசாமியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கவிதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், கவிதாவிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. 8-ந்தேதி இரவு என்னை அவர் வீட்டுக்கு அழைத்தார். நான் சென்றேன். நாங்கள் தனிமையில் இருந்தபோது கவிதாவின் செல்போனிற்கு பல ஆண்களிடம் இருந்து போன் வந்தது. அவர் என்னிடம் இருந்துகொண்டே போனில் மற்ற ஆண்களுடன் சிரித்து பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் நான் அவரிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த ஒரு கட்டையை எடுத்து அவரின் காலில் அடித்தேன். அவர் என்னை போலீசில் சொல்லி கொடுத்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் நான் அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்தேன். கவிதா தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் நம்ப வேண்டும் என்பதற்காக அவரது வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிவிட்டு தப்பி சென்று விட்டேன். இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story