தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. கேண்டீன் அமைக்க நடவடிக்கை அதிகாரி தகவல்


தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. கேண்டீன் அமைக்க நடவடிக்கை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 14 Nov 2019 3:00 AM IST (Updated: 14 Nov 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ரெயில் நிலையில் விரைவில் ஐ.ஆர்.சி.டி.சி. கேண்டீன் அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ரெயில் நிலையில் விரைவில் ஐ.ஆர்.சி.டி.சி. கேண்டீன் அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரெயில் நிலையம்

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று கோவை இணைப்பு ரெயில் மற்றும் நெல்லை பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் நீண்டகாலமாக கேண்டீன் வசதி இல்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் ரெயில்வே துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் விரைவில் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் கேண்டீன் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேண்டீன் வசதி

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும் போது, தூத்துக்குடி ரெயில் நிலையம் ஏ கிரேடு ரெயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தனியார் கேண்டீன்களுக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால் ரெயில் நிலையத்தில் கேண்டீன் அமைக்க தனியார் யாரும் முன்வரவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ரெயில்வே வாரியத்தில் எம்.பி. அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கிரேடு நிலை மாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் தொடர்ந்து புகார்கள் வருவதால், பயணிகள் நலன் கருதி ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் ரெயில் நிலையத்தில் கேண்டீன் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று கூறினார்.

Next Story