விற்பனை மந்தம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது


விற்பனை மந்தம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது
x
தினத்தந்தி 18 Nov 2019 11:15 PM GMT (Updated: 18 Nov 2019 8:30 PM GMT)

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை மந்தம் காரணமாக காய்கறி விலை சற்று குறைந்துள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறி இறக்குமதி செய்யப்படுகிறது. அந்தவகையில் தினமும் 350 முதல் 400 லாரிகள் வரை காய்கறி கொண்டு வரப்படுகின்றன.

இதற்கிடையே விளைச்சல் மற்றும் வரத்து குறைந்ததால் வெங்காயம், சாம்பார் வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது விளைச்சல், வரத்தில் முன்னேற்றம் இல்லாதபோதும் வியாபார மந்தநிலை காரணமாக காய்கறி விலை சற்று குறைந்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வு சங்க செயலாளர் எம்.அப்துல்காதர் கூறியதாவது:-

விற்பனை மந்தம்

தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டு வரப்படுகிறது. அண்டை மாநிலங்களில் பெய்த மழை காரணமாக விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் காய்கறி வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக வெங்காயம், சாம்பார் வெங்காயத்தின் விலை உச்சத்துக்கு சென்றது. முருங்கைக்காய் விலையும் வெகுவாக உயர்ந்தது.

தற்போது விளைச்சல், காய்கறி வரத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் வியாபாரத்தில் மந்தம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டமும் குறைந்திருக்கிறது. காய்கறி அழுகும் பொருள் என்பதால், விற்பனை செய்தாக வேண்டிய கட்டாயம் வியாபாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே விலை சற்று குறைந்திருக்கிறது. குறிப்பாக வெங்காயம் விலையில் ரூ.5 குறைந்திருக்கிறது. கேரட், பீட்ரூட், முள்ளங்கி விலை தலா ரூ.10 குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

வெங்காயம்- ரூ.65 முதல் ரூ.70 வரை (ரூ.75), உருளைக்கிழங்கு- ரூ.35 முதல் ரூ.40 வரை (மாற்றம் இல்லை), கேரட்- ரூ.35 முதல் ரூ.40 வரை (ரூ.50), பீன்ஸ்- ரூ.30 (ரூ.25), நூக்கல்- ரூ.25 (ரூ.30), சவ்சவ்- ரூ.15 முதல் ரூ.20 வரை (ரூ.20 முதல் ரூ.25 வரை), பீட்ரூட்- ரூ.25 முதல் ரூ.30 வரை (ரூ.35 முதல் ரூ.40), முட்டைக்கோஸ்- ரூ.18 முதல் ரூ.20 வரை (மாற்றம் இல்லை), பச்சை மிளகாய்- ரூ.35 (மாற்றம் இல்லை), குடை மிளகாய்- ரூ.50 (ரூ.55), இஞ்சி (பழையது)- ரூ.120 (மாற்றம் இல்லை), இஞ்சி (புதியது)- ரூ.60 முதல் ரூ.70 வரை (மாற்றம் இல்லை), சேனைக்கிழங்கு- ரூ.35 (மாற்றம் இல்லை), சேப்பங்கிழங்கு- ரூ.40 (மாற்றம் இல்லை), கத்திரிக்காய்- ரூ.30 முதல் ரூ.50 வரை (மாற்றம் இல்லை), வெண்டைக்காய்- ரூ.30 (ரூ.50 முதல் ரூ.55 வரை), அவரைக்காய்- ரூ.35 முதல் ரூ.40 வரை (ரூ.60 முதல் ரூ.70 வரை), கோவைக்காய்- ரூ.30 (ரூ.50), கொத்தவரங்காய்- ரூ.30 (ரூ.50), பாகற்காய்(பன்னீர்)- ரூ.40 (மாற்றம் இல்லை), பெரிய பாகற்காய் - ரூ.40 (மாற்றம் இல்லை), முருங்கைக் காய்- ரூ.120 (ரூ.140), முள்ளங்கி- ரூ.20 (ரூ.30), வெள்ளரிக்காய்- ரூ.25 (ரூ.30 முதல் ரூ.35 வரை), புடலங்காய்- ரூ.30 முதல் ரூ.35 வரை (ரூ.45), தக்காளி- ரூ.20 (ரூ.30), காலிபிளவர்(ஒன்று)- ரூ.30 முதல் ரூ.40 வரை (மாற்றம் இல்லை), பீர்க்கங்காய்- ரூ.35 (ரூ.50), சுரைக்காய்- ரூ.30 முதல் ரூ.35 வரை (ரூ.50), சாம்பார் வெங்காயம்- ரூ.80 முதல் ரூ.100 வரை (மாற்றம் இல்லை), தேங்காய்- ரூ.30 முதல் ரூ.35 வரை (மாற்றம் இல்லை), வாழைக்காய் (ஒன்று) - ரூ.8 முதல் ரூ.10 வரை (மாற்றம் இல்லை).

(குறிப்பு:- அடைப்புக்குறிக் குள் கடந்த வார விலை)

Next Story