மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி பெண் பலி மகன்-மாமியார் காயம்


மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி பெண் பலி மகன்-மாமியார் காயம்
x
தினத்தந்தி 27 Nov 2019 4:00 AM IST (Updated: 26 Nov 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

மகன்களை பள்ளி வேனில் ஏற்றிவிட வீட்டின் முன் நின்றிருந்தபோது, உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார். காயம் அடைந்த அவரது மகன், மாமியார் இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பவானி நகர், அரிச்சந்திரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜவேல். இவர், செங்குன்றத்தில் நெல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி காவேரி (வயது 32). இவர்களுக்கு சூரியபிரகாஷ் (9), ரித்தீஷ் (7) என 2 மகன்கள் உள்ளனர். செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சூரியபிரகாஷ் 4-ம் வகுப்பும், ரித்தீஷ் 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

நேற்று காலை சூரியபிரகாஷ், ரித்தீஷ் இருவரும் பள்ளிக்கு புறப்பட்டனர். பின்னர் பள்ளி வேனுக்காக வீட்டு வாசலில் மகன்கள் இருவருடன் காவேரியும், ராஜவேலின் தாயார் பத்மாவதியும் (62) காத்திருந்தனர்.

அப்போது வீட்டின் அருகே இருந்த மின் கம்பத்தில் இருந்து திடீரென உயர்மின் அழுத்த மின்கம்பி அறுந்து இவர்கள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் காவேரி, அவருடைய 2 மகன்கள் மற்றும் மாமியார் பத்மாவதி ஆகிய 4 பேரும் மயங்கி விழுந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரையும் மீட்டு செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், காவேரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதில் காயம் அடைந்த அவருடைய மாமியார் பத்மாவதி, மகன் சூரியபிரகாஷ் இருவரும் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ரித்தீஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டான்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், காவேரியின் உயிரிழப்புக்கு மின்சார வாரியம்தான் காரணம் என்று கூறி செங்குன்றம் சோத்துப்பாக்கம் சந்திப்பில், சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த புழல் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர்கள் ஜவகர்பீட்டர், தங்கதுரை, வசந்தன், புழல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலசந்தர், உதவி பொறியாளர்கள் சீனிவாசன், கமலக்கண்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பகுதியில் உள்ள மின்கம்பங்களையும், மின்கம்பிகளையும் புதிதாக மாற்றுவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story