கடலூரில் சாலையில் திடீர் பள்ளம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி

கடலூர் கே.கே.நகரில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கடலூர்,
கடலூரில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள், வடிகால் அமைக்கும் பணிகள், புதைவட மின் கேபிள் அமைக்கும் பணி என பல்வேறு பணிகளுக்காக சாலையில் பள்ளம் தோண்டப்படுகிறது. ஆனால் பணிகள் முடிந்ததும் தோண்டிய பள்ளம் மீண்டும் சரியாக மூடப்படுவதில்லை.
இந்த நிலையில் வாகன போக்குவரத்து காரணமாகவும், பலத்த மழைக்காலங்களிலும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகிவரும் அவலம் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.
இதற்கு உதாரணமாக கடலூர் கே.கே.நகரில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை கூறலாம். ஆம், நேற்று வண்ணாரப்பாளையத்தில் இருந்து தேவனாம்பட்டினம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் கே.கே.நகரில் சுமார் 10 அடி சுற்றளவில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டதால் அவர்கள் கடும் அவதியடைந்தனர். சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதை அறிந்து அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடோடி வந்து பார்த்தனர்.
பின்னர் இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதாளசாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்த பின்னர் பள்ளத்தில் மண் கொட்டி மூடப்பட்டது. பின்னர் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கியதால் அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டது. பின்னர் சாலை சீரமைப்பு பணியின் போது பள்ளத்தில் கிராவல் மண் கொட்டி சீரமைக்கப்பட்டது.
அதன்பின்னர் மழைக்காலங்களில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. இப்படி சுமார் 10 முறை அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் எற்படுவதால் சாலையில் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தெரியாமல் பள்ளத்தில் இறங்கினால் அவர்களின் கதி அதோகதிதான். எனவே இந்த பள்ளத்துக்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story