நீர்பிடிப்பு முகடு மேலாண்மையில், புதிய தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டும்


நீர்பிடிப்பு முகடு மேலாண்மையில், புதிய தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டும்
x
தினத்தந்தி 2 Dec 2019 9:45 PM GMT (Updated: 2 Dec 2019 4:08 PM GMT)

நீர்ப்பிடிப்பு முகடு மேலாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டும் என்று முகாமில் நீர் தொழில்நுட்ப நிலைய இயக்குனர் பேசினார்.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள மத்திய அரசின் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் ஊரக வாழ்வாதார பகுதிகளில் நீர்பிடிப்பு முகடு மேலாண்மையில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து தேசிய அளவிலான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. முகாமில் முதன்மை விஞ்ஞானி ராஜா அனைவரையும் வரவேற்றார். முகாமை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக நீர் தொழில்நுட்ப நிலைய இயக்குனர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் வேளாண்மை அதிக பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்த வண்ணம் உள்ளது. வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து இருக்கிறது. இதனால் பனி உருகி உலகம் முழுவதும் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு 1 மில்லி மீட்டர் கடல் நீர்மட்டம் உயருகிறது. அதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, கடல்நீர் உட்புக காரணமாக அமைகிறது.

சராசரியாக ஆயிரத்து 250 மில்லி மீட்டர் மழை பெய்து வந்தது. நடப்பாண்டில் மழை அளவு குறைந்து ஆயிரத்து 50 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. காலநிலை மாற்றத்தால் மழை பெய்யும் நாட்களும், மழை அளவும் குறைந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 90 செ.மீ மழை பதிவானது.

மலைப்பிரதேசங்களில் ஒரே நேரத்தில் அதிகளவு மழை பெய்தால் மண்சரிவு ஏற்படுவதுடன், மண்ணில் உள்ள தாதுக்கள் அடித்து செல்லப்படுகிறது. இந்தியாவில் புல்புல் உள்பட 2 புயல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது. காலநிலை மாற்றம் உலகளவில் பிரச்சினையாக உள்ளது.

ஒரு மனிதருக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இதற்கு பெய்யும் மழைநீரை சேமித்து பயன்படுத்த வேண்டும். இயற்கை வளங்களை முறையாக பாதுகாக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும். இதற்கு நீர்ப்பிடிப்பு முகடுப்பகுதி மேலாண்மை தீர்வாக அமையும். எனவே, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நீர்பிடிப்பு முகடு மேலாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்து, அதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் பயிற்சிக்கான புத்தகம் வெளியிடப்பட்டது.

இதில் ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணன், விஞ்ஞானி ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், குஜராத், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள் 25 பேர் கலந்துகொண்டு உள்ளனர். இந்த முகாம் வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Next Story