தற்காலிக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்: ராணிப்பேட்டை நகராட்சி கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்


தற்காலிக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்: ராணிப்பேட்டை நகராட்சி கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:15 PM GMT (Updated: 3 Dec 2019 7:33 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்ட தற்காலிக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ராணிப்பேட்டை நகராட்சி சுலைமான் கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிப்காட்( ராணிப்பேட்டை), 

வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தற்காலிகமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் ராணிப்பேட்டை கெல்லீஸ் சாலையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற மயில்வாகனன் தற்போது ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்காலிக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செயல்பட ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள பழமை வாய்ந்த சுலைமான் கட்டிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை நகராட்சியின் பெரும்பாலான அலுவலக பணிகள் புதிய கட்டிடத்தில் நடைபெறுவதால் இந்த கட்டிடத்தை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தற்காலிகமாக இயங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் கடந்த 1962-ம் ஆண்டில் அப்போதைய எம்.பி. ஜெயராமனால் திறந்து வைக்கப்பட்டது. இதனுடைய விஸ்தரிப்பு கட்டிடத்திற்கு கடந்த 1966-ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு உள்துறை அமைச்சர் கக்கன் தலைமையில் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் அடிக்கல் நாட்டியுள்ளார்.

கீழ்தளத்தில் ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் அறையும், நகராட்சி அலுவலகம் ஆகியவை இயங்கி வந்தது. மேல்தளத்தில் நகரமன்ற கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கம் இருந்தது. இவை அனைத்தும் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருவதால் இந்த கட்டிடம் உபயோகமில்லாமல் இருந்தது.

இதையடுத்து இந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் புதுப்பிக்கும் பணியை நேற்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

Next Story