அயோத்தியாப்பட்டணம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி: நீச்சல் பழகிய போது பரிதாபம்


அயோத்தியாப்பட்டணம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி: நீச்சல் பழகிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 6 Dec 2019 4:15 AM IST (Updated: 5 Dec 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தியாப்பட்டணம் அருகே நீச்சல் பழகிய போது கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அயோத்தியாப்பட்டணம், 

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள தெலுங்கானூரை சேர்ந்தவர் சீனிவாசமூர்த்தி. இவருடைய மகன் விஷால் (வயது 18). அதே பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (18), ராஜேஷ் (18), சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் லோகேஷ் (18). இவர்கள் அனைவரும் நண்பர்கள். இவர்கள் சேலத்தில் உள்ள சோனா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் குள்ளம்பட்டியில் உள்ள சேகர் என்பவரது தோட்டத்து கிணற்றுக்கு நீச்சல் பழகுவதற்கு சென்றனர். இவர்களில் லோகேசிற்கு மட்டுமே நீச்சல் தெரியும். மற்றவர்களுக்கு நீச்சல் தெரியாது. இதனால் மற்றவர்கள் காலி பிளாஸ்டிக் கேன்களை உடலில் கட்டிக்கொண்டு நீச்சல் பழகினர். அப்போது விஷால் கட்டியிருந்த கேனின் கயிறு அவிழ்ந்தது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

இதைப்பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர் ஆனால் முடியவில்லை. இதில் தண்ணீரில் மூழ்கி விஷால் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரிப்பட்டி போலீசாருக்கும், சேலம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றில் இருந்து விஷாலின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story