தஞ்சையில் சின்னவெங்காயம்-பல்லாரி விலை மேலும் உயர்வு கிலோ ரூ.200, ரூ.180-க்கு விற்பனை


தஞ்சையில் சின்னவெங்காயம்-பல்லாரி விலை மேலும் உயர்வு கிலோ ரூ.200, ரூ.180-க்கு விற்பனை
x
தினத்தந்தி 7 Dec 2019 10:45 PM GMT (Updated: 7 Dec 2019 7:28 PM GMT)

தஞ்சையில் வெங்காயம் விலை மேலும் உயர்ந்து சின்னவெங்காயம் கிலோ ரூ.200-க்கும், பல்லாரி ரூ.180-க்கும் விற்பனையானது.

தஞ்சாவூர்,

சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்னவெங்காயம் தென்மாநில சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் உணவு பொருட்களில் ஒன்றான சின்னவெங்காயம் சைவம் மற்றும் அசைவம் என எல்லா சமையல்களிலும் பயன்படுத்தக்கூடியவையாகும். கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக தான் இருந்து வருகிறது.

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு கொடைக்கானல், திண்டுக்கல், பொள்ளாச்சி, ஓசூர், தேனி உள்ளிட்ட இடங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அந்த மாநிலங்களில் மழையின் காரணமாக வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

விளைச்சல் குறைவு

விளைச்சல் குறைவு என்பதால் மார்க்கெட்டிற்கு வரக்கூடிய வெங்காயத்தின் அளவும் குறைந்துள்ளது. இதனால் ஏலத்தில் எடுக்கக் கூடிய வியாபாரிகள் அதிகவிலை கொடுத்து வெங்காயத்தை வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஏலத்தில் அதிகவிலைக்கு வாங்கிய வெங்காயத்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெங்காயம் தட்டுப்பாடு காரணமாக தஞ்சையில் வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்ன வெங்காயமும், பெரிய வெங்காயம் என்று அழைக்கப்படும் பல்லாரியும் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனையானது. வரத்து குறைந்து கொண்டே சென்றதால் மேலும் விலை அதிகரித்து தஞ்சையில் நேற்று சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.200-க்கும், பல்லாரி ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக இருப்பதால் சிலர், வெங்காயத்தின் விலையை கேட்டு விட்டு, வாங்காமல் செல்கின்றனர்.

வியாபாரிகள் கருத்து

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, வடமாநிலங்களில் மழையின் காரணமாக வெங்காயம் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. பெங்களூரு சந்தைக்கு இப்போது 10 முதல் 20 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வருகிறது. இதனால் ஏலத்தில் போட்டி போட்டு கொண்டு வெங்காயத்தை வியாபாரிகள் வாங்குவதால் விலை அதிகரித்து வருகிறது. தஞ்சைக்கு வரக்கூடிய வெங்காயத்தின் அளவும் குறைந்துள்ளது. வெங்காயத்தை இறக்குமதி செய்து விற்பனைக்கு அரசு கொண்டு வரவில்லை என்றால் இன்னும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என்றனர்.


Next Story