புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தவர்கள்: கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் மாயம் - அலையில் சிக்கிய 4 பேர் மீட்பு


புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தவர்கள்: கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் மாயம் - அலையில் சிக்கிய 4 பேர் மீட்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 11:00 PM GMT (Updated: 14 Dec 2019 8:23 PM GMT)

புதுவைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் கடலில் குளித்த போது அலையில் சிக்கினர். இதில் ஒருவர் மாயமானார். 4 பேர் மீட்கப்பட்டனர்.

புதுச்சேரி, 

வேலூர் அருகே ராணிப்பேட்டை காவிரிப்பாக்கம் பகுதியில் உள்ள கலைக்கல்லூரியில் படித்து வந்தனர். விடுமுறையையொட்டி இவர்கள் உள்பட 13 மாணவர்களும், ஒரு வாலிபரும் நேற்று புதுச்சேரிக்கு வந்தனர்.

இங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து இருந்தனர். அங்கு தங்களது உடைமைகளை வைத்து விட்டு புதுவையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். பகல் சுமார் 12½ மணியளவில் தலைமைச் செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் திட்டுக்கு வந்தனர். காந்திசிலை அருகே அமர்ந்து கடலில் எழுந்த அலையை பார்த்து ரசித்தனர்.

இதைப்பார்த்ததும் கடலில் இறங்கி குளிக்க ஒரு மாணவருக்கு ஆசை வந்தது. உடனே அவர் கடலில் இறங்கி குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் அவர் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்ததும் கரையில் இருந்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் 4 பேர் கடலில் குதித்து அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களும் கடல் அலையில் சிக்கினர்.

இதனால் கரையில் இருந்த மற்றவர்கள் உதவிகேட்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி மனோகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் அங்கு வந்தனர். கடலில் குதித்து மாணவர்களை தேடினர். அவர்களுடன் சேர்ந்து நீச்சல் தெரிந்த பொதுமக்களும் மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். இதில் அலையில் சிக்கிய மாணவரை மீட்பதற்காக கடலில் குதித்து அலையில் சிக்கிய 4 மாணவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களிடம் விசாரித்ததில் பனப்பாக்கத்தை சேர்ந்த பாலு மகன் சூர்யா (வயது 18), நேதாஜி (18), ரமேஷ் மகன் விஜய் (19), மற்றொரு விஜய் (18) என்பதும் கடல் அலையில் சிக்கி மாயமானவர் கோவர்த்தனன் என்பதும் தெரியவந்தது.

இவர்களில் சூர்யா, விஜய் ஆகிய 2 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடல் அலையில் சிக்கி மாயமான மாணவர் கோவர்த்தனனை தீயணைப்பு துறையினரும், மீனவர்களும் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் மதியம் 2.30 மணியளவில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மாணவர் கோவர்த்தனனை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அவர் பலியாகி இருக்க லாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Next Story