வெங்காய விலை உயர்வால் அதிர்ஷ்டம்: ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய - சித்ரதுர்கா விவசாயி


வெங்காய விலை உயர்வால் அதிர்ஷ்டம்: ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய - சித்ரதுர்கா விவசாயி
x
தினத்தந்தி 16 Dec 2019 12:07 AM GMT (Updated: 16 Dec 2019 12:07 AM GMT)

வெங்காய விலை உயர்வால் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி, ஒரே மாதத்தில் கோடீஸ் வரராகி விட்டார்.

பெங்களூரு,

சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக வெங்காயம் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்தில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தற்போதைய சூழலில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200-யை தாண்டியது. இதனால் வெங்காய விலையை கேட்டே பொதுமக்கள் கண்ணீர் வடித்தனர்.

இருப்பினும் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு லாபம் கிடைத்து வருகிறது. அந்த வகையில் வெங்காய விலை உயர்வால் ஒரே மாதத்தில் கர்நாடகத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கோடீஸ்வரராகி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சித்ரதுர்கா மாவட்டம் தொட்டசித்தவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜூன் (வயது 42). விவசாயி. இவருக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் வெங்காயம் பயிரிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ரூ.5 லட்சம் அவருக்கு லாபம் கிடைத்தது.

நடப்பு ஆண்டில் மல்லிகார்ஜூன் தனது 10 ஏக்கர் நிலம் உள்பட மேலும் 10 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் வாங்கி ரூ.15 லட்சம் செலவில் வெங்காயம் பயிரிட்டார். தற்போது வெங்காய விலை உயர்ந்த நிலையில் அவர் தான் பயிரிட்ட வெங்காயத்தை அறுவடை செய்து விற்று வருகிறார். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மல்லிகார்ஜூன் 240 டன் அளவுக்கு வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்துள்ளார்.

இதன்மூலம் மல்லிகார்ஜூன் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து கோடீஸ்வரராகி உள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜூன் கூறியதாவது:-

‘நான் வெங்காயம் பயிரிடுவதற்காக கடன் வாங்கி இருந்தேன். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் கடன் தொகை உள்பட ரூ.15 லட்சத்தில் வெங்காயம் பயிரிட்டேன். கடந்த அக்டோபர் மாதம் வெங்காய விலை குறைவாக இருந்தது. இதனால் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டேன்.

நவம்பர் மாதத்தில் அதிர்ஷ்டவசமாக வெங்காய விலை உயர்வு எனக்கு கைக்கொடுத்தது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒரு குவிண்டால் வெங்காயத்தை ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்தேன். அதன்பிறகு சில நாட்களில் ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.12 ஆயிரத்தை தொட்டது. இதன்மூலம் எனக்கு அதிக லாபம் கிடைத்தது. இதனால் எனது கடனை அடைத்துவிட்டேன். புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளேன். மேலும் நிலம் வாங்கி விவசாயத்தை விரிவுப்படுத்த உள்ளேன்.’ இவ்வாறு அவர் கூறினார்.

மல்லிகார்ஜூனிடம் விவசாய பணியில் தினமும் 50 பேர் பணியாற்றி வருகிறார்கள். தற்போதைய வெங்காய விலை உயர்வால் திருட்டை தடுக்கும் பொருட்டு மல்லிகார்ஜூன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இரவில் தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story