நெல்லையில், நாளை கடன் விழிப்புணர்வு முகாம் - கலெக்டர் ‌ஷில்பா தகவல்


நெல்லையில், நாளை கடன் விழிப்புணர்வு முகாம் - கலெக்டர் ‌ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 18 Dec 2019 10:30 PM GMT (Updated: 18 Dec 2019 8:25 PM GMT)

நெல்லை மாவட்ட அளவிலான கடன் விழிப்புணர்வு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது என்று கலெக்டர் ‌ஷில்பா கூறினார்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட அளவிலான கடன் விழிப்புணர்வு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக மாவட்ட அளவிலான கடன் விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்கும் முகாம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்க கட்டிடத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசுத் துறைகளான மாவட்ட தொழில் மையம், தாட்கோ, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, மகளிர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சிக்கான பல்வேறு அரசு நல மற்றும் கடன் திட்டங்கள் குறித்த விளக்க அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் சார்பில் வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டு வரப்பெறும் கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்தல் மற்றும் தேவையான கடன் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். எனவே பொதுமக்கள், தங்களுக்கு தேவைப்படும் தனி நபர் கடன், தொழில் முனைவோர் கடன், முத்ரா கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான கடன், கல்விக் கடன் வேண்டுவோர் இம்முகாமில் தங்களுடைய அடையாள மற்றும் முகவரி சான்று, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் கடன் பெற தேவையான பிற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story