பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குளித்தலையில், வக்கீல் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பு - உதவி கலெக்டரிடம் மனு அளித்தனர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில், வக்கீல் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் இது தொடர்பாக உதவி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
குளித்தலை,
குளித்தலை வக்கீல் சங்க அவசர பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தலைவர் சாகுல்அமீது தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கரூர்-திருச்சி சாலையில், சாலையின் இருபுறமும் குளித்தலை போலீசாரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. போக்கு வரத்தை சரி செய்ய வேண்டிய போலீசாரே போக்கு வரத்துக்கு இடையூறாக உயிர்பலி ஏற்படும் விதமாக வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தினமும் பொதுமக்களும் வக்கீல்களும் நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள ரோட்டில் செல்லும்போது அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை போலீசாரிடம் தெரிவித்தும் வாகனங்களை அப்புறப்படுத்தாமல் உள்ளனர். இது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குளித்தலை பகுதிகளில் முத்திரைத்தாள் விற்பனை செய்து வரும் நபர்களிடம் நீதிமன்ற ஸ்டாம்ப் கேட்டால் எப்போதும் இல்லை என்று கூறி வருகின்றனர். அப்படியே ஸ்டாம்பு இருந்தாலும் ரூ.5, ரூ.10 ஸ்டாம்ப் மட்டும் உள்ளன எனக்கூறி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதுபோல் விற்பனை செய்யும் விற்பனையாளரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் குளித்தலையில் உள்ள அனைத்து கடைகளிலும் அதிகவிலைக்கு தாராளமாக கோர்ட் ஸ்டாம்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. குளித்தலை சார்நிலை கருவூலத்தில் ரூ.20 கோர்ட் ஸ்டாம்ப் இல்லை என்று கூறி விடுகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. அதற்கு சார் நிலை கருவூல அதிகாரிகள் உடந்தையா என தெரியவில்லை. இதற்கு மாவட்ட பதிவாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதாக இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று வக்கீல் சங்கத்தினர் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் சங்க தீர்மானத்தின்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குளித்தலை உதவி கலெக்டர் ஷேக் அப்துல்ரகுமானிடம் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story