மத்திய அரசின் அடுத்த நகர்வு: பொது சிவில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை - திருச்சி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கே.டி.ராகவன் பேச்சு


மத்திய அரசின் அடுத்த நகர்வு: பொது சிவில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை - திருச்சி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கே.டி.ராகவன் பேச்சு
x
தினத்தந்தி 21 Dec 2019 4:15 AM IST (Updated: 21 Dec 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் அடுத்த நகர்வாக பொது சிவில் சட்டம் விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருச்சியில் நடந்த பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கே.டி.ராகவன் பேசினார்.

திருச்சி, 

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், பொய் பிரசாரம் செய்து வரும் எதிர்க்கட்சிகளை கண்டித்தும் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே திருச்சி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்க ராஜைய்யன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன், வி‌‌சுவ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாநில பொறுப்பாளர் அருண், கோட்ட பொறுப்பாளர் சுப்பிரமணியன், பாலக்கரை மண்டல தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கே.டி.ராகவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அவரும் கொடுக்கவில்லை. நாமும் கேட்கவில்லை. ஜம்மு-கா‌‌ஷ்மீரில் முன்பு முதல்-அமைச்சராக இருந்த பரூக் அப்துல்லா, 10 முறை மோடி ஆட்சிக்கு வந்தாலும் கா‌‌ஷ்மீருக்கான 370 அரசியல் சட்டப்பிரிவை நீக்க முடியாது என்று முழங்கினார். ஆனால், இன்று அச்சட்டம் நீக்கப்பட்டு விட்டது. முத்தலாக் சட்ட விரோதம். அது களையப்படும் என்று வாக்குறுதி அளித்தோம். அதன்படி, முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டு முடிவு கட்டப்பட்டது. அயோத்தி நிலப்பிரச்சினையில் சட்டப்படி அணுகி தீர்வு காணப்பட்டது. இப்படி சொன்னதையெல்லாம் செய்து வருகிறோம்.

ஆனால், தி.மு.க. செய்வதைத்தான் சொல்வோம், சொல்வதைத்தான் செய்வோம் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றினர். இப்போது தமிழ்நாட்டு மக்களை வேண்டுமென்றே மதரீதியாக திசை திருப்பி இந்தியாவை பிளவுபடுத்த தி.மு.க. துடிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழுகிற முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இதனை நாடாளுமன்றத்தில் பிரதமரும், உள்துறை மந்திரியும் தெளிவுபடுத்தி விட்டனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளும் தங்களை முஸ்லிம் நாடுகள் என்று பிரகடனப்படுத்தி விட்டன. இதனால், அந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள்தான் வெளியேற்றப்படுகிறார்கள். அவர்களது வழிபாட்டு தலங்களும் அந்த நாடுகளில் சூறையாடப்பட்டுள்ளன. எனவேதான், அந்த நாடுகளில் இருந்து வரக்கூடிய முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மை மக்களுக்காக குடியுரிமை சட்ட திருத்தத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் இருக்கக்கூடிய இலங்கை அகதிகள், அவர்களின் தாய்நாட்டிற்கு செல்வதையே விரும்புகிறார்கள். இந்திய அரசு அவர்களுக்காக இலங்கையில் 50 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. அவர்களை சொந்த நாட்டில் குடியமர்த்துவதுதான் பா.ஜ.க.வின் விருப்பம். அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்.

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக சென்னை வந்தபோது, அவரை விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது தி.மு.க. ஆட்சியில்தான். ஸ்டாலினுக்கு அது தெரியும்தானே. ஆனால், இன்று இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பதாக ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? என்று தெரியவில்லை. இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது இலங்கையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தும் தடுக்க முன்வரவில்லை. மத்தியில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. தாய் நாட்டில் வீடு, நிலங்களை இழந்து வந்தவர்களை அங்கு மீண்டும் போகவிடாமல் செய்வதுதான் மு.க.ஸ்டாலினின் சதித்திட்டம். இப்போது மீண்டும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சிக்கு வந்துள்ளார். தி.மு.க. எப்போதும் ராஜபக்சேவின் கைக்கூலி. அவருடன் சேர்ந்து சதி செயலை செய்து கொண்டிருக்கிறது.

இனி ஸ்டாலின் அடுத்த போராட்டத்துக்கும் தயாராகட்டும். ஏனென்றால், அடுத்து நாட்டில் பொது சிவில் சட்டத்தை அரசியல் சாசனம் 44 வழிகாட்டு நெறிமுறைப்படி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றமும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. எனவே, மத்திய அரசின் அடுத்த நகர்வாக பொது சிவில் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அடுத்து பசுவதை தடுப்பு சட்டமும் நிச்சயம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story