குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2019 4:50 AM IST (Updated: 21 Dec 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் வக்கீல்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புதுவை வக்கீல்கள் நேற்று காலை கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் லெனின் துரை தலைமை தாங்கினார். மூத்த வக்கீல் ஜீவானந்தம், வக்கீல்கள் சிவசாமி, கார்த்திகேயன், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா மற்றும் மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அண்ணாசாலையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அருள்ஒளி தலைமை தாங்கினார்.

இதில் மாநில செயலாளர் ஸ்ரீதர், திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு. அய்யப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் வீர.மோகன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

புதுச்சேரி முல்லா வீதியில் உள்ள பள்ளிவாசலில் நேற்று மதியம் 12.30 மணியளவில் தொழுகை நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பின்னர் அவர்கள் பள்ளிவாசல் முன்பு ஒன்று கூடினர்.

அங்கு அவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதே போல் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story