அரக்கோணம் அருகே, தேனீக்கள் கொட்டியதில் 19 மாணவ, மாணவிகள் பாதிப்பு - மருத்துவமனையில் சிகிச்சை

அரக்கோணம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 19 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் தாலுகா, சித்தேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 355 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் எஸ்.ரகு உள்பட 15 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் நேற்று முன்தினம் அரையாண்டு தேர்வு முடிந்து மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 10-ம் வகுப்பு படிக்கும் 66 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தது. வகுப்பு இடைவேளை நேரத்தில் மாணவ, மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியே சென்றனர்.
பள்ளி சுற்றுச்சுவருக்கு வெளியே 10 அடி தொலைவில் இருந்த கருவேல மரத்தில் தேன் கூடு இருந்தது. அந்த பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் தேனை எடுக்க காலை 11 மணியளவில் முயற்சி செய்தனர். அப்போது கூடு கலைந்து தேனீக்கள் சுற்றி இருந்தவர்களை கொட்ட ஆரம்பித்தது.
அங்கே நின்று கொண்டிருந்த கிராமமக்கள் 6 பேர் மற்றும் பள்ளி சுற்றுசுவர் வளாகத்தில் நின்று கொண்டிருந்த 6 மாணவிகள், 13 மாணவர்கள், ஒரு ஆசிரியர் ஆகியோரை தேனீக்கள் கொட்டியது.
இதனால் மாணவ, மாணவிகள் கூச்சலிட்டு பள்ளிக்கு ஓடினார்கள். சிலருக்கு தேனீக்கள் கொட்டிய இடத்தில் வீக்கம் ஏற்பட்டது.
உடனடியாக தலைமை ஆசிரியர் ரகு, உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் முத்தமிழ்பாண்டியன், கல்வி ஆய்வாளர் குமரவேல், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அரசு மருத்துவமனை முன்பாக குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அரக்கோணம்துணை போலீஸ் சூப்பிரண்டு கே.மனோகரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story