வடகர்நாடகத்தில் கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கர்நாடக அரசுக்கு, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கடிதம்
வடகர்நாடகத்தில் கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரு,
வடகர்நாடகத்தில் கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து கர்நாடக அரசுக்கு, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கடிதம் எழுதியுள்ளார்.
அனுமதி ரத்து
கர்நாடகம், கோவா, மராட்டிய மாநிலங்களுக்கு இடையே மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நதிநீர் பிரச்சினை தொடர்பாக மகதாயி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அந்த தீர்ப்பை மத்திய அரசு இன்னும் தனது அரசிதழில் வெளியிடவில்லை. இதனால் நடுவர் மன்றம் கூறிய தீர்ப்பு இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளது.
இதற்கிடையில், மகதாயி நதிநீர் மூலம் வடகர்நாடக மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதற்கு கோவா அரசு எதிர்ப்பு தெரிவித்ததாலும், மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாலும், கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கர்நாடகத்திற்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது.
மத்திய மந்திரி கடிதம்
மத்திய அரசின் முடிவுக்கு கர்நாடக மாநில காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்களும், வடகர்நாடக மாவட்ட மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசி இருந்தார். அப்போது அவர், கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தநிலையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தடை எதுவும் விதிக்கவில்லை
மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக எனக்கு கடிதம் எழுதி இருந்ததுடன், நீங்கள் என்னை சந்தித்தும் பேசி இருந்தீர்கள். வடகர்நாடகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. அதனால் கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்கான பணிகளை செயல்படுத்தலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.
என்றாலும், மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பான நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டதும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற்று கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்கான பணிகளை தொடரலாம். கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தடை எதுவும் விதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story