தாளவாடி அருகே, கரும்பு தோட்டத்தில் இருந்த சிறுத்தை குட்டிகள் - வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்

தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் இருந்த சிறுத்தை குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு சென்றார்கள்.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துகு உட்பட்ட தொட்டமுதிகரை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தன்னுடைய தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். கரும்பு நன்றாக வளர்ந்திருந்ததால், கடந்த 5 நாட்களாக கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.
விவசாய தொழிலாளர்கள் ஒரு பாத்தியில் இருந்த கரும்புகளை வெட்டும்போது, 2 சிறுத்தை குட்டிகள் கரும்பு தோகையில் படுத்திருப்பது தெரியவந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனே ஜீர்கள்ளி வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார்கள்.
தகவல் கிடைத்ததும், ஜீர்கள்ளி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். பின்னர் 2 சிறுத்தை குட்டிகளையும் பத்திரமாக மீட்டு வனத்துைற அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்கள். இதுபற்றி வனத்துைறயினர் கூறும்போது, ‘இந்த சிறுத்தை குட்டிகள் பிறந்து 20 நாட்கள் இருக்கலாம். கரும்புகள் உயரமாக வளர்ந்து புதர்போல் இருந்ததால் தாய் சிறுத்தை தோட்டத்தில் குட்டிகளை ஈன்று இருக்கலாம். அல்லது காட்டில் ஈன்று குட்டிகளை தோட்டத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டு இரை தேட சென்று இருக்கலாம். மீட்கப்பட்ட சிறுத்தையை பத்திரமாக பாதுகாப்போம். உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி சிறுத்தை குட்டிகளை காட்டுக்குள் விடுவதா? அல்லது விலங்குகள் சரணாலயத்தில் விடுவதா? என்று முடிவு செய்யப்படும்' என்றார்கள். வன அலுவலகத்தில் உள்ள சிறுத்தை குட்டிகளை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
Related Tags :
Next Story