பெங்களூருவில் பணப்பிரச்சினையில் பயங்கரம் நடுரோட்டில் வாலிபர் குத்திக்கொலை நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பெங்களூருவில் பணப் பிரச்சினையில் நடுரோட்டில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் பணப் பிரச்சினையில் நடுரோட்டில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாலிபர் கொலை
பெங்களூரு தீபாஞ்சலி நகர் அருகே வசித்து வந்தவர் மஞ்சுநாத் (வயது 25). இவர், ஸ்ரீராமபுரத்தில் வசிக்கும் நண்பர்களை பார்க்க நேற்று முன்தினம் இரவு வந்திருந்தார். ஸ்ரீராமபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நண்பர் ஒருவருடன் மஞ்சுநாத் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் மஞ்சுநாத்துடன் திடீரென்று சண்டை போட்டனர். பின்னர் அந்த நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுநாத்தை சரமாரியாக குத்தினார்கள்.
மேலும் அவரை ஆயுதங்களாலும் தாக்கினார்கள். இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் ஸ்ரீராமபுரம் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
பணப் பிரச்சினை...
அப்போது மஞ்சுநாத் முதலில் ஸ்ரீராமபுரம், பிரகாஷ்நகரில் வசித்து வந்ததும், சமீபத்தில் தான் தீபாஞ்சலிநகருக்கு சென்றதும் தெரிந்தது. மேலும் ஸ்ரீராமபுரத்தில் வசிக்கும் போது தனது நண்பர்களிடம் பணம் வாங்கி இருந்ததும், அதனை அவர் கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேச வேண்டும் என்று மஞ்சுநாத்தை, அவரது நண்பர்கள் அழைத்திருந்ததாக தெரிகிறது. அதன்படி, பணப் பிரச்சினை தொடர்பாக பேச வந்த மஞ்சுநாத்துடன், அவரது நண்பர்கள் தகராறு செய்து கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மஞ்சுநாத்தை, அவரது நண்பர்கள் அடித்து, உதைத்து தாக்குவது உள்ளிட்ட காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் மூலம் கொலையாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஸ்ரீராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத்தின் நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் ஸ்ரீராமபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story