வீட்டு வாசலில் கோலமிட்டவர்களை கைது செய்வதா? மக்கள் உரிமையில் அரசு தலையிடக் கூடாது - கே.எஸ்.அழகிரி பேட்டி


வீட்டு வாசலில் கோலமிட்டவர்களை கைது செய்வதா? மக்கள் உரிமையில் அரசு தலையிடக் கூடாது - கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 30 Dec 2019 10:45 PM GMT (Updated: 30 Dec 2019 1:51 PM GMT)

மக்கள் உரிமையில் அரசு தலையிடக்கூடாது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

பரங்கிப்பேட்டை,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கீரப்பாளையம் உள்பட 7 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தனது சொந்த ஊர் திருப்பணிநத்தம் ஆகும். எனவே அவர் நேற்று காலை கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டுப்போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பணம், படை பலத்துடன் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சர் ஓட்டுக்கேட்பது வேதனை அளிக்கிறது. தற்போது உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போட வாக்காளர்களுக்கு தலா ரூ.1000 கொடுப்பதாக கேள்விப்பட்டேன். ஒரு ஊரில் 3 ஆயிரம் ஓட்டுகள் இருந்தால் எத்தனை லட்சம் ரூபாய் கொடுத்திருப்பார்கள். அவ்வாறு பணம் கொடுத்து வெற்றிபெற்று பதவி ஏற்றால் அவர், மக்கள் பணி செய்யாமல், தேர்தலில் செலவு செய்த பணத்தை திருடவே முயற்சிப்பார் என்பதை அரசு உணர வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொண்டு வந்த பஞ்சாயத்துராஜ்யத்தை சீரழிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் முதல்–அமைச்சர், அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கக்கூடாது என்ற மரபு உள்ளது. ஆனால் அந்த மரபையே அ.தி.மு.க.வினர் மீறுகின்றனர்.

மக்கள் உரிமையில் அரசு தலையிடக்கூடாது. பெண்கள், தங்களது வீட்டு வாசலில் கோலமிடுவது அவர்கள் விருப்பம். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், தங்களது வீட்டு வாசலில் கோலமிட்டனர். ஒரு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மக்களின் விருப்பமாகும். இதற்காக கோலமிட்டவர்களை கைது செய்வது ஜனநாயகத்தின் கேலி கூத்தாக உள்ளது. மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படுகிறது.

கன்னியமிக்க காவல் துறை தங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு ஏவலாளியாக இருக்கக்கூடாது. கோலமிட்டவர்களை கைது செய்ய போலீசாருக்கு யார் உத்தரவு கொடுத்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது யார்? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. கோலமிட்டவர்வர்களை கைது செய்ய போலீசாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. எனது வீட்டிலும், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோலமிட்டுள்ளோம். முடிந்தால் போலீஸ் என்னை கைது செய்யட்டும். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகத்திறன் இல்லை. இதனால் அவர் ஓடி, ஒளிகிறார். தமிழகம் அராஜகத்தின் உச்சமாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story