புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களை கேலி-கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் கமி‌‌ஷனர் தீபக் டாமோர் எச்சரிக்கை


புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களை கேலி-கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் கமி‌‌ஷனர் தீபக் டாமோர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2019 10:00 PM GMT (Updated: 30 Dec 2019 9:22 PM GMT)

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களை கேலி-கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் தீபக் டாமோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை, 

புத்தாண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு பிறக்கிறது. இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் பலத்த பாதுகாப்பு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மது அருந்திக்கொண்டோ, அஜாக்கிரதையாகவோ, அதிவேகமாகவோ மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை ஓட்டக்கூடாது.

வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்லக்கூடாது. இதன்மூலம் தேவையற்ற வாகன விபத்துகளை தவிர்க்கலாம்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள், பிறருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருக்கக்கூடாது. புத்தாண்டு தின வாழ்த்து கூறுவது என்ற பெயரில் ஆண்கள், பெண்களுக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. பெண்களை கேலி-கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது. இதை பெற்றோர் முறைப்படுத்த வேண்டும். இதனால் சிறுவர்கள் வாகன விபத்தை தவிர்க்கலாம்.

குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். ஆட்சேபிக்கத்தக்க வகையில் பொது இடங்களிலோ, நட்சத்திர விடுதிகளிலோ, பிற விடுதிகளிலோ போஸ்டர்கள், விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. கட்டணம் வசூல் செய்து புத்தாண்டு தின நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.

நெல்லை மாநகர பகுதியில் முக்கிய இடங்கள் மற்றும் பெரும்பாலான பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

நெல்லை மாநகர பகுதியில் பணியாற்றும் போலீசார் ரோந்து பணியில் இருப்பார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அருகில் பணியில் இருக்கும் போலீசாரிடம் தெரிவிக்கலாம். அல்லது காவல்துறை கட்டுப்பாட்டு எண் 100, 0462-2562651, 2970057, 2571028 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் போலீசார் மாநகர பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள். மேற்படி நடைமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story