ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மைசூரு கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மைசூரு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மைசூரு,
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக மைசூரு நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அரங்கேறின.
மேலும் மைசூருவில் உள்ள ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் நடன நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டி உள்பட பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அத்துடன் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
மைசூரு மாநகரை பொறுத்தவரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி மைசூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் நடந்தது.
இந்தநிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று காலை மைசூரு நகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மைசூரு அருகே சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
லட்டு பிரசாதம்
அதுபோல் மைசூரு விஜயநகரில் உள்ள யோக நரசிம்ம சாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை லட்டு, புளியோதரை பிரசாதமாக வழங்கப்பட்டது.
மேலும் புத்தாண்டையொட்டி மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவில், வெங்கடேஸ்வரர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், மாரியம்மன் கோவில்கள் ராமர், கிருஷ்ணர் கோவில்களிலும், நஞ்சன்கூடு டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில், மாதேஸ்வரர் கோவில், சித்தப்பாஜி கோவில், மகாந்தேஸ்வர சாமி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்
இதுமட்டுமல்லாமல் மைசூரு மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மைசூரு அரண்மனை, சாமராஜேந்திரா உயிரியல் பூங்கா, மண்டியா கே.ஆர்.எஸ். அணை மற்றும் பிருந்தாவன் கார்டன், ஸ்ரீரங்கப்பட்டணா ரங்கநாதர் கோவில் மற்றும் சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
சமீபத்தில், மைசூரு உயிரியல் பூங்காவுக்கு புதிய வரவாக வந்த ஹுலாக் கிப்பன் ரக குரங்கு பொதுமக்கள் பார்வையிட நேற்று முதல் அனுமதிக்கப்பட்டது. இதனை மாநில வனத்துறை மந்திரி சி.சி.பட்டீல் தொடங்கிவைத்தார். விடுமுறை என்பதால் உயிரியல் பூங்கா டிக்கெட் கவுண்ட்டர்களில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட்களை பெற்று உயிரியல் பூங்கா உள்ளே சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் உள்ள தர்மஸ்தலா கோவில், கொல்லூர் மூகாம்பிகை கோவில், பெங்களூரு ராஜாஜி நகர் 5-வது பிளாக்கில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் தர்மஸ்தலா கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story