விழாக்கோலமாக காட்சியளித்த வாக்கு எண்ணிக்கை மையம்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் திரு விழாக்கோலமாக காட்சியளித்தது.
காரைக்குடி,
உள்ளாட்சி தேர்தலையொட்டி காரைக்குடியில் அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் என்ஜினீயரிங் கல்லூரியில் கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும், அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 6 மணி முதலே வேட்பாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் ஏஜெண்டுகளும் கூட்டம் கூட்டமாக மோட்டார் சைக்கிள், வேன் ஆகிய வாகனங்களில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தனர். இவர்களை போலீசார் மையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தி அனுமதி சீட்டு வைத்திருந்தவர்களை மட்டும் அனுமதித்தனர். இதையடுத்து அனுமதி சீட்டு வைத்திருந்த வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகளை தீவிர சோதனைக்கு பின்னரே மையத்திற்குள் அனுமதித்தனர்.
முன்னதாக அவர்கள் வைத்திருந்த செல்போன்களை போலீசார் பெற்றுக்கொண்டனர். அதன்பின்னர் காலை 8.30 மணிக்கு வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள், ஏற்கனவே பூட்டி சீல் வைக்கப்பட்ட அறையை திறந்து வாக்குப்பெட்டிகளை வாக்குச்சீட்டு பிரிக்கும் அறைக்கு கொண்டு சென்றனர். அங்கு வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் முன்னிலையில் திறந்து பிளாஸ்டிக் டப்பிள் கொட்டினர். அதன் பின்னர் வாக்குச்சீட்டுகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றது. அதன் பின்னர் அருகிலுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைக்கு கொண்டு சென்றனர்.
ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளை சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகளிடம் தேர்தல் பணியாளர்கள் காண்பித்தனர். இவ்வாறு ஒவ்வொரு சுற்று வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை ஏஜெண்டுகள் ஆர்வத்துடன் தங்களது நோட்டுகளில் குறித்து வைத்துக்கொண்டனர். அதன்பின்னர் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலம் தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு செய்தனர். இதனை அந்தந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கல்லூரி வெளியே நின்றுகொண்டு உற்சாகமடைந்தனர். ஒரு கட்டத்தில் கல்லூரி சாலையில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கூட்டம் அதிகரித்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைதொடர்ந்து ஒவ்வொரு வார்டுகளாக வெற்றி பெற்ற வேட்பாளர்களை அறிவித்தனர். இதையடுத்து ஆதரவாளர்கள் வெற்றி பெற்றவர்களுக்காக மாலைகளுடன் காத்திருந்தனர். வெற்றிபெற்றவர்களை மாலை அணிவித்து மேள தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக அழைத்து சென்றனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையம் திருவிழா போல காட்சியளித்தது.
Related Tags :
Next Story