மோட்டார் வாகனங்களின் விற்பனை சரிவு: கர்நாடக அரசுக்கு ரூ.460 கோடி வரி இழப்பு; முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


மோட்டார் வாகனங்களின் விற்பனை சரிவு: கர்நாடக அரசுக்கு ரூ.460 கோடி வரி இழப்பு; முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2020 5:45 AM IST (Updated: 6 Jan 2020 11:03 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் வாகன விற்பனை சரிவால், கர்நாடக அரசுக்கு ரூ.460 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதையொட்டி நிதி, வணிகம், கலால் உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நடப்பு நிதி ஆண்டில் 3 காலாண்டுகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த பட்ஜெட் மார்ச் மாதம் 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். வணிகவரி, நிதித்துறை, கலால்துறை, போக்குவரத்து துறை, நில அறிவியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் வணிக வரி வசூல் இலக்கு ரூ.76 ஆயிரத்து 46 கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் இதுவரை ரூ.55 ஆயிரத்து 984 கோடி வரி வசூலாகியுள்ளது. அதாவது இலக்கில் 73.6 சதவீதத்தை எட்டியுள்ளோம்.

சரக்கு-சேவை வரி வசூல் ரூ.61 ஆயிரத்து 245 கோடி ஆகும். தேசிய அளவில் கர்நாடகம் 2-வது இடத்தில் உள்ளது. இந்த சரக்கு-சேவை வரி வசூல் வளர்ச்சி 14.2 சதவீதம் ஆகும். இந்த வரி செலுத்தாமல் ஏமாற்றும் நிறுவனங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தாமதமாக வரி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் வரி செலுத்தாமல் இருக்கும் நிறுவனங்களை கண்டறிந்து ரூ.551 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் புதிய ஜி.எஸ்.டி. படிவம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த படிவத்தை வியாபாரிகளிடையே பிரபலபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கலால்துறையில் நடப்பு ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 950 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ.16 ஆயிரத்து 187 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்துடன் ஒப்பிட்டால் ரூ.1,165 கோடி அதிகமாக வசூலாகியுள்ளது.

இந்த முறை மதுபானத்தின் விலையை உயர்த்தவில்லை. ஆனால் இலக்கை எட்டியுள்ளோம். மதுபான கடைகள் மற்றும் உற்பத்திக்கான உரிமம் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. மதுபானத்தை சட்டவிரோதமாக விற்பது, முறையாக வரி செலுத்தாமல் முறைகேடு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

போக்குவரத்து துறையில் ரூ.7,100 கோடி வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ.6,601 கோடி வசூலாகியுள்ளது. வாகன விற்பனை சரிந்துவிட்டதால் அரசுக்கு ரூ.460 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வரி இழப்பை வேறு வருமானம் மூலம் சரிெசய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு மற்றும் முத்திரைத்தாள் துறையில் ரூ.11 ஆயிரத்து 828 கோடி வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.8,297 கோடி வரி வசூலாகியுள்ளது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story