திருக்கழுக்குன்றத்தில் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க - பொதுமக்கள் கோரிக்கை


திருக்கழுக்குன்றத்தில் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Jan 2020 4:23 AM IST (Updated: 7 Jan 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றத்தில் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்கவும், கழிவுநீர் கால்வாய்களை முறையாக அமைத்துத்தர கோரியும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்டது பள்ளமங்கலம் கிராமம். இந்த கிராமத்தின் 6-வது தெருவானது வயல் வெளியின் அருகில் அமைந்துள்ளது.

இந்த தெருவில் அமைந்துள்ள மின் கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் சில மாதங்களுக்கு முன்பு பழுதாகிவிட்டதால், இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதாக தெரிகிறது.

இந்த பகுதி வயல்வெளியை ஒட்டியுள்ளதால் இரவில் பாம்பு, விஷ பூச்சிகளால் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும் இப்பகுதியில் குப்பைத் தொட்டிகளும், கழிவுநீர் கால்வாய்களும் முறையாக அமைக்கப்படவில்லை. குப்பைத் தொட்டிகள் இல்லாததால் தெருவில் கொசுக்கள் உற்பத்தியாகி காலரா போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அவல நிலையும் உள்ளது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

உடனே இதை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அது போல திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் சாலையில் கொத்தி மங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின் விளக்குகளும் நீண்ட காலமாக பழுதடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக மின் விளக்குகள் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தித்தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story