கோபி தனிமாவட்டமாக உருவாவதை அமைச்சர் தடுக்கிறார் - ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு


கோபி தனிமாவட்டமாக உருவாவதை அமைச்சர் தடுக்கிறார் - ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Jan 2020 10:45 PM GMT (Updated: 7 Jan 2020 4:25 PM GMT)

கோபி தனிமாவட்டமாக உருவாவதை அமைச்சர் தடுக்கிறார் என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

ஈரோடு,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியினரை பாராட்டி பேசினார்.

முன்னதாக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கொ.ம.தே.க. சார்பில் 4 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 10 ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், 24 ஊராட்சி மன்ற தலைவர்கள், 200 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியும், தி.மு.க. கூட்டணியும் சமஅளவில் வெற்றியை பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இல்லாமல் இருந்திருந்தால், தி.மு.க. கூட்டணி இன்னும் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்.

கோர்ட்டு உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என நம்புகிறேன். இந்த தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி பெறும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது டி.என்.பி.எஸ்.சி. மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எனவே முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். பொள்ளாச்சி, எடப்பாடி, கும்பகோணம் ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக உருவாவதை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தடுக்கிறார். அவர் தடுப்பது மட்டுமின்றி கிண்டல் செய்து பேசுகிறார்.

சட்டசபையில் கவர்னர் உரை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் உள்ளது. ஆனால் தொழில் வளர்ச்சியில் முதலாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகளை மூடியதால் உபரி மின்சாரம் கிடைக்கிறது. இதனால்தான் மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அமைச்சர் தங்கமணி சொல்கிறார். இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

கூட்டத்தில், மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, தொழிற்சங்க தலைவர் ஜெகநாதன், இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, கொங்கு கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story