ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது


ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 11 Jan 2020 10:56 PM GMT (Updated: 11 Jan 2020 10:56 PM GMT)

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.

ஊத்துக்குளி,

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் மறைமுகத் தேர்தல் நேற்று ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறுகிறது. ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் மொத்தம் 12 உள்ளன. அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பில் போட்டியிட இடம் கிடைக்காத அதிருப்தி வேட்பாளர்கள் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டனர். அ.தி.மு.க. சார்பில் மரகதமணி, சம்பத்குமார், மோகனசுந்தரி, சிவக்குமார், மோகன் ஆகிய 5 கவுன்சிலர்களும், தி.மு.க. சார்பில் யமுனாதேவி, சிவமதி, பிரேமா ஈஸ்வரமூர்த்தி, கலைவாணி ஆகிய 4 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டு கல்பனா, மூர்த்தி, நடராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிப்பதற்கு 7 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. அ.தி.மு.க.-5, தி.மு.க.-4, சுயேச்சை-3 ல் வெற்றி பெற்றுள்ளதால் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவை பெற இரு கட்சியினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தி.மு.க.விற்கு 2 சுயேச்சை கவுன்சிலர்களும், அ.தி.மு.க.விற்கு 1 சுயேச்சை கவுன்சிலரும் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்பட்டது.

எனவே இரு கட்சியினருக்கும் தலா 6 கவுன்சிலர் ஆதரவு இருப்பதால் யார் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் காலை 11 மணிக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் மற்றும் சுயேச்சை கவுன்சிலர் 2 பேர் ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். 12 மணிக்கு மேல் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர் வந்தனர். வார்டு 12ல் வெற்றிபெற்ற நடராஜ்(சுயேச்சை) ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரவில்லை. தி.மு.க. சார்பில் ஒன்றியக்குழு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிரேமா ஈஸ்வரமூர்த்தி 6 பேர் ஆதரவுடன் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனிதா, சந்திரிகா ஆகியோர் அறிவித்தனர்.


Next Story