வேலூர் சைதாப்பேட்டையில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலையில் 2 பேர் சிக்கினர் - மதுபாட்டில் உடைந்த தகராறில் வெறிச்செயல்
மதுபாட்டில் உடைந்த தகராறில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 29). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் சைதாப்பேட்டை முருகன் கோவில் பின்புறம் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் முன்பு நின்று கொண்டிருந்தபோது மர்மநபர்களால் சரமாரி குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் கூறுகையில், கொலை நடந்த இடத்தின் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. மது விற்பனை செய்பவர்கள் மூதாட்டி ஒருவர் மூலம் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்பன் அங்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சைதாப்பேட்டையை சேர்ந்த 2 வாலிபர்கள் அந்த மூதாட்டியிடம் மது வாங்கியபோது மதுபாட்டில் கீழே விழுந்து உடைந்தது. இதனால் அந்த வாலிபர்கள் மூதாட்டியிடம் தகராறு செய்தனர். அப்போது அய்யப்பன் மூதாட்டிக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது.
இதனால் அந்த வாலிபர்களுக்கும், அய்யப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அய்யப்பன் அவர்களையும், அவர்கள் அய்யப்பனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர்கள் அய்யப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். நேற்று முன்தினம் அய்யப்பன் சம்பவ இடத்துக்கு வந்தபோது மறைந்திருந்த அந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென அய்யப்பனை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story