விடுபட்ட ரே‌‌ஷன் கார்டுதாரர்கள் 21-ந் தேதி வரை பொங்கல் பரிசு பெறலாம் - அதிகாரி தகவல்


விடுபட்ட ரே‌‌ஷன் கார்டுதாரர்கள் 21-ந் தேதி வரை பொங்கல் பரிசு பெறலாம் - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 Jan 2020 4:00 AM IST (Updated: 19 Jan 2020 12:03 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் வருகிற 21-ந் தேதி வரை விடுபட்ட ரே‌‌ஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என்று வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

ஊட்டி, 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரே‌‌ஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 கடந்த 9-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 323 ரே‌‌ஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த கார்டுதாரர்களுக்கு 318 முழு நேர ரே‌‌ஷன் கடைகள், 89 பகுதிநேர ரே‌‌ஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்படுகிறது.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கடந்த வாரம் காலை முதலே அந்தந்த பகுதி ரே‌‌ஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொண்டனர். ஊட்டியில் ரே‌‌ஷன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசை பெற்றனர்.

கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. ரே‌‌ஷன் அட்டை இல்லாதவர்கள், அவர்களது ரே‌‌ஷன் அட்டையில் உள்ள நபர்களின் ஆதார் அடையாள அட்டையை வைத்து பொங்கல் பரிசை பெற்று செல்கின்றனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொண்டது குறித்து ரே‌‌ஷன் கடைகளில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியாமல் விடுபட்டவர்களுக்கு வருகிற 21-ந் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 12 ஆயிரத்து 323 ரே‌‌ஷன் கார்டுதாரர்களில், 4 ஆயிரம் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறவில்லை. அவர்கள் அந்தந்த ரே‌‌ஷன் கடைகளில் வருகிற 21-ந் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என்று வட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

Next Story