‘சுதந்திர காஷ்மீர்’ என்ற பதாகையை வைத்திருந்த நளினி பாலகுமார் மீதான வழக்கின் விசாரணை 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு


‘சுதந்திர காஷ்மீர்’ என்ற பதாகையை வைத்திருந்த   நளினி பாலகுமார் மீதான வழக்கின் விசாரணை 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு   நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 22 Jan 2020 3:30 AM IST (Updated: 22 Jan 2020 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘சுதந்திர காஷ்மீர்’ என்ற பதாகையை வைத்திருந்த நளினி பாலகுமார் மீதான வழக்கின் விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து மைசூரு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

மைசூரு,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், புதுடெல்லியில் ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவிகள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூரு பல்கலைக்கழக மாணவ-மாணவிகள், தலித் சங்கத்தினர், ஆராய்ச்சி மாணவர்கள் சங்கத்தினர் ஆகியோர் மைசூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மைசூரு பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவியும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான நளினி பாலகுமார் ‘சுதந்திர காஷ்மீர்’ என்று எழுதப்பட்டிருந்த பதாகையை கையில் வைத்திருந்தார்.

தேசத்துரோக வழக்கு

மேலும் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீசார் இளம்பெண் நளினி பாலகுமார் மீது தேசத்துரோக பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவரை கைது செய்யவும் முயன்றனர்.

ஆனால் அவர் இவ்வழக்கில் இருந்து முன் ஜாமீன் பெற்றிருந்தார். இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

இந்த நிலையில் நளினி பாலகுமாருக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் ஆஜராகக்கூடாது என்று மைசூரு வக்கீல்கள் சங்கத்தினர் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இதன்காரணமாக பெங்களூருவில் இருந்து வக்கீல் துவாரகாநாத் தலைமையில் 150 வக்கீல்கள் ஒரு தனியார் பஸ்சில் மைசூருவுக்கு சென்று நளினி பாலகுமாருக்கு ஆதரவாக வாதாடுவதாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

முதலில் இதற்கு மைசூரு வக்கீல்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று மைசூரு வக்கீல்களில் மற்றொரு பிரிவினரும், நளினி பாலகுமாருக்கு ஆதரவாக வாதாடுவதாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதனால் மைசூரு வக்கீல்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

24-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

இந்த நிலையில் நேற்று மதியம் நளினி பாலகுமார் மீதான வழக்கு மைசூரு கோர்ட்டில் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நளினிக்கு ஆதரவாக வாதாட வக்கீல்கள் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் இவ்வழக்கின் விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு(நாளை மறுநாள்) ஒத்தி வைத்தார்.

நளினி பாலகுமாரின் வழக்கால் நேற்று மைசூரு கோர்ட்டு மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story