பாரபட்சம் பார்க்காமல் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்ற வேண்டும் - ஊராட்சி தலைவர்களுக்கு, கலெக்டர் அறிவுரை

பாரபட்சம் பார்க்காமல் மக்களோடு மக்களாக இணைந்து ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் விஜயலட்சுமி அறிவுரை வழங்கினார்.
சின்னாளபட்டி,
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பயிற்சி முகாம் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக நேற்று காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், ஆத்தூர், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, வடமதுரை, குஜிலியம்பாறை ஆகிய 6 ஒன்றியங்களில் உள்ள 108 கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 108 ஊராட்சி தலைவர்கள், 108 ஊராட்சி துணை தலைவர்கள் என மொத்தம் 216 பேர் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி முகாமில் கலெக்டர் விஜயலட்சுமி கலந்துகொண்டு, ஊராட்சி தலைவர்களுக்கான கையேட்டை வழங்கி பயிற்சியை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டை முழுமையாக படித்து அதன்படி செயல்பட வேண்டும். தங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என பாரபட்சம் பார்க்கக்கூடாது. மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். குடிநீருக்கான ஆதாரங்களை கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் கிராம சபை கூட்டங்களை முறையாக நடத்தி பொது மக்களின் கருத்துகளை கேட்டு செயல்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது ஊராட்சியை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சுகாதாரம், மாசில்லாத ஊராட்சி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில், கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டத்தை பொது மக்களுக்கு தெரிவித்து சிறப்பாக ஊராட்சியை வழிநடத்த வேண்டும். ஊராட்சி தலைவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வழங்குவார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளையும் மாதிரி ஊராட்சிகளாக மாற்ற ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள் மக்களோடு மக்களாய் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதரணி, ஆத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, ஆணையாளர் சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) நத்தம், சாணார்பட்டி, வேடசந்தூர், கொடைக்கானல், ரெட்டியார்சத்திரம் ஆகிய 5 ஒன்றியங்களில் வெற்றிபெற்ற 205 ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாமும், நாளை (வெள்ளிக்கிழமை) ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி ஆகிய 3 ஒன்றியங்களில் வெற்றிபெற்ற 93 ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கு பயிற்சி முகாமும் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story