அரசு திட்டங்களை ஊராட்சி மன்ற தலைவர்கள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு


அரசு திட்டங்களை ஊராட்சி மன்ற தலைவர்கள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2020 10:15 PM GMT (Updated: 23 Jan 2020 11:43 PM GMT)

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு திட்டங்களை முழுமையாக செயல் படுத்த வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் கேட்டுக்கொண்டார்.

காரைக்குடி, 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கான அறிமுகம் மற்றும் பயிற்சி கூட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். அமைச்சர் பாஸ்கரன், கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான அறிமுகம் மற்றும் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

முதல்-அமைச்சர் கிராமப்புற பகுதிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் 4 நாட்கள் பயிற்சி கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி ஏற்கனவே தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, எஸ்.புதூர் ஆகிய ஊராட்சிகளுக்காக முதல் நாளும், சிவகங்கை, கல்லல், திருப்பத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2-வது நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், நாளை திருப்புவனம், மானாமதுரை, சிங்கம்புணரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் என மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

பயிற்சியில் அனுபவம் மிகுந்த பயிற்சியாளர்கள் மூலம் கிராம ஊராட்சியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதுடன், அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கப் படும். மேலும் அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, கிராமப்புறங்களை தூய்மையாக வைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்தாலே அந்த ஊராட்சி சிறந்த ஊராட்சியாக மாறிவிடும். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட்டு அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான் கிராமப்புறங்களில் உள்ள தனி மனிதனின் பொருளாதார நிலை உயரும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான தகவல் கையேட்டை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், உதவி இயக்குனர் விஜயநாதன், பாம்கோ கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மெய்யப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story