தை அமாவாசையையொட்டி குளித்தலை காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையையொட்டி குளித்தலை காவிரி ஆற்றில் தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
குளித்தலை,
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை போன்ற 3 அமாவாசைகள் சிறப்பு வாய்ந்த அமாவாசையாக இந்துகளால் நம்பப்படுகிறது. இந்த தினங்களில் இறந்து போன தாய், தந்தையர், முன்னோர்களுக்கு நீர் நிலைகளில் பூஜை செய்து திதி, தர்ப்பணம் செய்தால் அவர்களின் கடைசி ஆசி கிடைக்கும் என்பது ஜதீகம். அதன்படி நேற்று தை அமாவாசை என்பதால் காசிக்கு அடுத்தபடியாக கருதப்படும் கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் ஆங்காங்கே அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் சென்று இறந்த தங்களது தாய், தந்தை, முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், தங்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்யவேண்டுமென வேண்டி ஒரு தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை, பூ, அருகம்புல் வைத்து பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.
பின்னர் தர்ப்பணம் செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். இதையடுத்து ஆற்றின் அருகே உள்ள கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டு சென்றனர். இதேபோல வேலாயுதம்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
நொய்யல்
நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தைஅமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, திருமஞ்சனம், சந்தனம், பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதேபோல், சேமங்கி மாரியம்மன் கோவில், குந்தானிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில், நத்தமேடு, கரியம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புன்னம் பெரியூர் அம்மன் கோவில், குந்தானிபாளையம், திருக்காடுதுறை மாரியம்மன் கோவில், தங்காயிஅம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே நாணப் பரப்பு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. தை மாதஅமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் மற்றும் பால்குடங்களை சுமந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழகப்பட்டது. இதேபோல் வேலாயுதம்பாளையம் மலைவீதியில் உள்ள மகாமாரியம்மன் கோவில், காகிதபுரம் வல்லபை கணபதி கோவிலில் உள்ள விஷ்னு துர்க்கை அம்மன், மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் தை அமாவாசையை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.
Related Tags :
Next Story