மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வுகள்: ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு - கலெக்டர் தொடங்கி வைத்தார்


மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வுகள்: ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Jan 2020 10:30 PM GMT (Updated: 27 Jan 2020 10:05 PM GMT)

காஞ்சீபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு பயிற்சி மையம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கான ஆளுமைத் திறன் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் கலெக்டர் பா.பொன்னையா பேசியதாவது:-

மத்திய, மாநில அரசால் பல்வேறு பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் விடாமுயற்சி எடுத்து தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் (யு.பி.எஸ்.சி.) 27 வகையான பணியிடங்களுக்கு ஒரே போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் மூலம் ஆண்டுக்கு 800 முதல் 1,000 நபர்கள் வரை தேர்வு செய்யப்படுகின்றனர்.

மேலும் வங்கிப் பணியாளர் தேர்வு, ரெயில்வே பணியிடங்களுக்கான தேர்வு, தமிழக அரசின் தகுதித் தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளுக்கு தயார் செய்யவிருக்கும் மாணவ, மாணவிகள் இந்த திறன் பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி தங்களின் திறனை வளர்த்து முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (மாவட்ட வேலைவாய்ப்பு நலம்) அருணகிரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி தனலட்சுமி, தனி வட்டாட்சியர் அகிலாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story