கோவை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த கண்காணிப்பு கூட்டம் - 4 எம்.பி.க்கள் பங்கேற்பு


கோவை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த கண்காணிப்பு கூட்டம் - 4 எம்.பி.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 10:15 PM GMT (Updated: 28 Jan 2020 4:19 PM GMT)

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த கண்காணிப்பு கூட்டத்தில் 4 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசு நிதி மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கண்காணிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜாமணி முன்னிலை வகித்தார்.

இதில் எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், சண்முகசுந்தரம், வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய கிராம நகர திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், சத்துணவு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட் டது. மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும், இனிவரும் ஆய்வுக்கூட்டங்களில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களையும் பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story