பள்ளிக்கூட வேன் மோதி குழந்தை சாவு: உறவினர்கள் சாலை மறியல்
தனியார் பள்ளிக்கூட வேன் மோதி குழந்தை பலியான சம்பவத்தை தொடர்ந்து, உறவினர்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திசையன்விளை,
திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் யாதவர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மகன் மகேஷ் (வயது 2). நேற்று முன்தினம் மகேஷ் தெருவில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளிக்கூட வேன், குழந்தையின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவம் பற்றி திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் இட்டமொழியை சேர்ந்த செல்வன் (30) என்பவரை கைது செய்தார்.
இந்த நிலையில் வேன் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குழந்தை மகேசின் உறவினர்கள் நேற்று காலை திசையன்விளை- நாங்குநேரி சாலையில் நந்தன்குளம் விலக்கில் மறியல் செய்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜூடி, சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், அழகுராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலைமறியல் செய்வது சட்டப்படி குற்றம். சாலைமறியல் தொடர்ந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story