பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பரபரப்பு; 5 கைதிகள் அடுத்தடுத்து சாவு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உடல் நலக்குறைவால் 5 கைதிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட தண்டனை கைதிகளும், விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளில் யாருக்காவது ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 18 நாட்களில் உடல்நலக்குறைவால் மூதாட்டி உள்பட 5 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதாவது கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வீரேஷ் என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த 11-ந் தேதி மரணமடைந்தார்.
இதுபோன்று ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த முகமது ரம்ஜான் கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். இவர் கடந்த 22-ந் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதுபோல கல்லப்பா என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் கடந்த 25-ந் தேதி உடல்நலக் குறைவால் இறந்துபோனார்.
கடந்த 27-ந்தேதி கெஞ்சம்மா என்ற 75 வயது மூதாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். மேலும் விஜயப்புரா மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஹமீத் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் கடந்த 28-ந் தேதி உடல்நலக் குறைவால் திடீரென்று இறந்துபோனார்.
பரப்பனஅக்ரஹாரா சிறையில் உடல் நலக்குறைவால் கைதிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சிறை கைதிகள், சிறைகாவலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
இது குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிறையில் உடல்நலக்குறைவால் இறந்த கைதிகள் 5 பேருக்கும் சிறை ஆஸ்பத்திரியில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் உடல் நலக்குறைவால் தான் உயிரிழந்தனர். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை” என்றார்.
இருப்பினும் சிறை ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே சிறை மருத்துவமனையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சிறையில் தான், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story