மாவட்ட பஞ்சாயத்து வளர்ச்சி பணிகளை கிராம பஞ்சாயத்து மூலம் செயல்படுத்த வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முதல் கூட்டத்தில் தீர்மானம்


மாவட்ட பஞ்சாயத்து வளர்ச்சி பணிகளை கிராம பஞ்சாயத்து மூலம் செயல்படுத்த வேண்டும்;  கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முதல் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 Feb 2020 3:17 AM IST (Updated: 1 Feb 2020 3:17 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட பஞ்சாயத்து வளர்ச்சி பணிகளை கிராம பஞ்சாயத்து மூலம் செயல்படுத்த வேண்டும் என்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முதல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிக்கான நேரடி மற்றும் மறைமுக தேர்தல் முடிந்தபிறகு மாவட்ட பஞ்சாயத்தின் முதல் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் உள்ள வருவாய்த்துறை கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் (அ.தி.மு.க.) தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிவகுமார் (பா.ஜனதா), மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ஜான்சிலின் விஜிலா, நீலபெருமாள், பரமேஸ்வரன் (அ.தி.மு.க.), அம்பிளி, செலின்மேரி, லூயிஸ், ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல் (காங்கிரஸ்), ராஜேஷ்பாபு (பா.ஜனதா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களாக தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது, கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செலவினங்களை மாவட்ட பஞ்சாயத்து அங்கீகரித்து அனுமதி அளிப்பது, ஊரக உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், சிறப்பாக ஆட்சி நடத்திவரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பது,

மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான கார் வாங்கி 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதால் அதனை கழிவுநீக்கம் செய்து புதிய வாகனம் வாங்க மன்றம் அங்கீகரிப்பது, மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை கிராம பஞ்சாயத்து மூலமாக செயல்படுத்த அனுமதிக்க கோருவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story